கர்நாடக மாநிலத்தைப் போல மகாராஷ்டிராவிலும் தனி மதமாக அறிவிக்கக் கோரி லிங்காயத்துகள் பேரணி நடத்தியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மண்டல ஆணையர் அலுவலகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கான லிங்காயத்துகள் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியை 103 வயதுமிக்க சிவலிங் சிவாச்சார்யா மகாராஜ் என்பவர் தலைமைதாங்கி நடத்த, லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள், மதகுருமார்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட லிங்காயத்துகள், தங்களது சமுதாயத்தை தேசிய அளவில் சிறுபாண்மையின மதமாக அறிவிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
பேரணியைத் தலைமைதாங்கிய சிவலிங் சிவாச்சார்யா மகாராஜ், ‘லிங்காயத்துகளை தனித்த மதமாக அறிவிக்கவேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து நாங்கள் பேரணியை நடத்துகிறோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், அதை ஏற்கும் வரை எங்கள் பேரணி தொடரும்’ என அறிவித்துள்ளார். மேலும், தங்களது மதம் மிகப்பழமை வாய்ந்தது எனக்கூறிய அவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும், கிட்டத்தட்ட 4 கோடி பேர் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்தப் பேரணியில் கலந்துகொண்ட தலைவர்கள் மண்டல ஆணையரை நேரில் சந்தித்து, தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.
முன்னதாக, கர்நாடக மாநில அரசு அம்மாநிலத்தில் லிங்காயத்துகளை தனிமதமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.