![lightning in bihar](http://image.nakkheeran.in/cdn/farfuture/cG5HV6No-uBw8N4EqYkHPmeSHiorkFog0Il8AXSAfyU/1593862174/sites/default/files/inline-images/sss_14.jpg)
மின்னல் தாக்கி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள், பீகார் மாநிலத்தில் தொடர்கதையாகி வரும் நிலையில், இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல இடங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதில், கடந்த மாதம், ஒரேநாளில் பீகாரில் மின்னல் தாக்கி 23 மாவட்டங்களில் 20க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து ஒரே நாளில் மின்னல் தாக்கி 107 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த மாநிலங்களில் மழைப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். பீகாரின் லக்கிசராய், கயா, பாங்கா, ஜமுய், சமஸ்திபூர், வைஷாலி, நாலந்தா மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து மின்னல் காரணமாக அதிக மக்கள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் பீகார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.