கர்நாடகா மாநிலம், கொப்பள் மாவட்டத்தில் உள்ள மரகும்பி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு, அங்குள்ள முடிதிருத்தும் கடை, உணவகங்கள் போன்ற கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், பட்டியலின மக்களுக்கு சொந்தமான பல வீடுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், பல பட்டியலின மக்களை ஒரு கும்பல் உடல் ரீதியாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த சம்வசம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில், சந்தேகமுள்ள 117 பேரை விசாரித்து, 101 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கும் கொப்பல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 10 வருடங்களாக நடந்த வந்த இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களை முடிந்ததையடுத்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், வன்முறையில் ஈடுபட்ட 101 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, 98 பேருக்கு ரூ.5,000 அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள மூன்று பேருக்கு ரூ.2,000 அபராதத்துடன் கூடிய ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை எனக் கூறப்படுகிறது.