அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. இதில் எல்.ஐ.சி நிறுவனம் அதானி குழுமத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது எல்ஐசி அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டிய தகவல்கள் அனைத்தும் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
அந்த ஆய்வறிக்கையில், பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக்காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச்செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் 4.20 லட்சம் கோடி இழப்பை சந்தித்தன.
இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்திருந்தது என்றும், அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி 77 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது என்றும் அதானி குழுமப் பிரச்சனையால் எல்.ஐ.சி 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினைச் சந்தித்துள்ளது எனவும் கூறப்பட்டது. அதேபோல் எஸ்பிஐ, இந்தியன் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளும் அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்து இருந்தன. இவையனைத்தும் மக்கள் பணம். இதனால் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரும் என பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், இது குறித்து எல்.ஐ.சி விளக்கமளித்துள்ளது. அதில், அதானி குழுமத்தில் தாங்கள் முதலீடு செய்தது அனைத்தும் உரிய தரமதிப்பீடுகள் கொண்டவை. அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் 36 ஆயிரத்து 474 கோடி ரூபாய். ஜனவரி 27 ஆம் தேதி வரை அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 56 ஆயிரத்து 142 கோடி ரூபாய். எல்.ஐ.சி நிர்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 41.66 லட்சம் கோடி. தவறான தகவல்களைப் பரவுவதால் முதலீட்டு விவரங்களைப் பகிர்கிறோம் என எல்.ஐ.சி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படியே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் எல்.ஐ.சி கூறியுள்ளது.