
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வரும் நோயாளிகளுக்குத் தடிப்புத் தோல் அழற்சியை (சொரியாசிஸ்) குணப்படுத்தப் பயன்படும் இடோலிசுமாப் மருந்தைப் பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதற்கான பிரத்தியேகமான மருந்து என்பது இன்னும் கண்டறியப்படாத சூழலே நிலவுகிறது. இதற்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டறியும் பணிகள் உலகம் முழுதும் நடந்துவரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த வேறுசில நோய்களுக்கு வழங்கப்படும் மருந்து கலவைகளே நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தடிப்புத் தோல் அழற்சியை (சொரியாசிஸ்) குணப்படுத்தப் பயன்படும் இடோலிசுமாப் மருந்தை கரோனா சிகிச்சையில் பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். நுரையீரல் நிபுணர்கள், மருந்தியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸின் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவால் இந்த மருந்தைக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் திருப்திகரமான முடிவுகளைக் கொடுத்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.