புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களுக்குக் கடந்த சில நாட்களாக ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி நிர்வாக சீர்திருத்தத் துறை சிறப்பு செயலாளர் கேசவன் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், 'அரசு அலுவலகங்களுக்குக் காலதாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள், ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் ஆய்வு குறித்த அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.