கரோனா நோய்த்தொற்று காரணமாக, பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சுமார் ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (06/02/2022) காலை 08.12 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள் ஒப்பிட முடியாததாக இருக்கும். அவர் மறைந்தாலும், அவரது தெய்வீக குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரைத் தொடர்புக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆறுதல் கூறினார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார். இந்திய கலாசாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக எதிர்காலத்தில் நினைவுக்கூறப்படுவார். லதா மங்கேஷ்கரின் மெல்லிய குரல் மக்களை மயக்கும் ஈடு இணையற்ற திறனைக் கொண்டிருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.