நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில், சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏக்களாக பதவி வகித்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, பா.ஜ.கவின் பசவராஜ் பொம்மை மற்றும் காங்கிரஸின் இ.துக்காராம் ஆகியோர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், சென்னபட்டணா தொகுதியில் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த ஹெச்.குமாரசாமி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அதன் பிறகு, அந்த மூன்று தொகுதிகளை காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலோடு, கர்நாடகாவில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த அக்டோபர் 25ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதில், சென்னபட்டணா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் யோகேஷ்வர், பா.ஜ.க கூட்டணியில் உள்ள ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். அதே போல், சிக்காவி தொகுதியில் பா.ஜ.க சார்பில் பரத் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் சார்பில் முகமது யாசிர், பதான் ஆகியோரும், சண்டூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக அன்னபூர்ணா துகாராம், பா.ஜ.க சார்பில் பங்காரு ஹனுமந்த் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், சென்னபட்டணா தொகுதியில் போட்டியிடும் நிகில் குமாரசாமி, நேற்று கண்ணமங்களா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரத்தின் போது பேசிய நிகில் குமாரசாமி, “தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் காங்கிரஸின் சதியால் நான் பாதிக்கப்பட்டேன். மக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்த போதிலும் நான் இந்த சதிக்கு இரையாகிவிட்டேன். நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன். நான் இன்று கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து இந்த தேர்தலில் போட்டியிட்டேன். தயவு செய்து இந்த இளைஞரை இந்த முறை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.