மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் வருமான வரித்துறையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி பேசுகையில், “ வருமான வரித்துறை என்பது மத்திய அரசின் கீழ் இல்லாமல் தனித்து சுயமாக செயல்பட வேண்டிய ஒரு துறை ஆனால், மோடியின் ஆட்சிக்கு பின்பு அது ஆட்சியில் இருப்பவர்களுக்காக வேலை செய்து வருகிறது. மோடி மற்றும் அமித்ஷாவின் கட்டளைகளை கேட்டுதான் வருமான வரித்துறை வேலை செய்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு, அது ஒரு சர்வாதிகார ஆட்சியாக உள்ளது. பெங்களூரு வருமான வரித்துறையின் இயக்குனருக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது என நினைக்கிறீர்களா? என்னிடம் ஆவணங்கள் இருக்கிறது” என்றார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு மாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிஹில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.