மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. அதேசமயம், தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் - பாஜகவினரிடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதல் வன்முறையாக மாறி சில நாட்கள் தொடர்ந்தது.
இந்த வன்முறையில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும், வீடுகள் கொளுத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய இந்த வன்முறை தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கொல்கத்தா உயர் நீதிமன்ற அறிவுத்தலின் பேரில், தேர்தலுக்குப் பிறகான இந்த வன்முறை குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவொன்று அமைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆய்வு செய்த இந்தக் குழு, சட்டம் ஒழுங்கை சரியாக கையாளவில்லை என மம்தா தலைமையிலான அரசைக் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு வன்முறை சம்பவங்களை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பரிந்துரை செய்தது.
ஆனால் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறிய மேற்கு வங்க அரசு, குழுவில் இடம்பெற்றுள்ள சிலருக்குப் பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. இந்தநிலையில், இன்று (19.08.2021) கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க வன்முறையை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வன்முறையை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்குமாறும், அதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அதிகாரி இடம்பெற வேண்டுமெனவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது மம்தா அரசுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.