காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜனுடன் இந்தியப் பொருளாதாரம், சர்வதேசப்பொருளாதாரம், இந்தியாவில் கரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சுமார் அரைமணிநேரம் காணொளிக்காட்சி மூலம் உரையாடினார்.
இதில் ராகுலின் கேள்விகளுக்குப் பதிலளித்த ரகுராம் ராஜன், "நாடு தழுவிய கரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியாவில் உள்ள ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைச் சரிசெய்ய நமக்கு சுமார் 65,000 கோடி ரூபாய் வரை நிதி தேவைப்படும். மேலும், நீண்டகால ஊரடங்கு என்பது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். கரோனாவுக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தில் போட்டிப்போடும் இரண்டு பெரிய சக்திகளில் இந்தியாவின் பெயர் இல்லை. ஆனால் பெரிய நாடு என்பதால் நம் குரலை உலகப் பொருளாதார அரங்கில் கேட்கச்செய்ய முடியும். ஊரடங்கை நீட்டிப்பதில் நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். மக்களுக்கு நீண்ட காலமாக உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லை என்பதால் நாம் குறிப்பிட்ட துறைகளை உடனே திறக்க வேண்டும். மீண்டும் திறக்கப்படும் இந்தத் துறைகளை நாம் திறம்பட நிர்வகிக்க வேண்டும்" என்றார்.
மேலும், மத்தியில் மட்டுமே அதிகளவு அதிகாரங்கள் குவிக்கப்படுவது குறித்து ராகுல் காந்தி கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ரகுராம் ராஜன், "அதிகாரம் பரவலாக்கப்படுவது முக்கியம் என்றே நான் கருதுகிறேன். உலகம் முழுதும் மக்கள் தங்களது அதிகாரத்தை இழந்து வருகிறார்கள். முக்கிய முடிவுகள் எங்கோ எடுக்கப்படுகிறது. மக்களால் அதனை எடுக்க முடிவதில்லை. மக்கள் என்ன உணர்கிறார்கள் என்றால் நம்மிடம் ஓட்டு இருக்கிறது ஆனால் நம் வாழ்வு பற்றிய முக்கிய முடிவுகள் தொலைதூரத்தில் எங்கேயோ எடுக்கப்படுகிறது என நினைக்கின்றனர். நம் ஊர் பஞ்சாயத்து, நம் மாநில அரசுக்குக் குறைந்த அதிகாரமே உள்ளது, எனவே நம்மால் எதையும் மாற்ற முடியாது என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.