கரோனா வைரஸ் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் பலி எண்ணிக்கை 6,500- ஐ கடந்து வருகிறது. இதில் இந்தியாவில் அதிக பட்சமாக மகராஷ்டிராவில் 38 பேர், கேரளாவில் 24 பேர், ஹரியானாவில் 14 பேர், உத்திரபிரதேசத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் தமிழ்நாட்டில் 1, ராஜஸ்தானில் 4 ,டெல்லியில் 6, கா்நாடகாவில் 7, ஜம்முவில் 2, லடாக்கில் 3, உத்திரகாண்டில் 1, பஞ்சாப் 1, தெலுங்கானா 3, ஆந்திரா 1 என்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் தீவிர மருத்துவ பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கேரளா கொச்சியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வந்தவா் மருத்துவர் ஷினு சியாமளனிடம் கரோனா வைரஸ் ஆரம்பக்கட்ட அறிகுறியுடன் நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை தனிவார்டில் வைத்து சிகிச்சை அளித்த மருத்துவர், இந்த தகவலை கேரளா சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
உடனே சுகாதாரத்துறை அந்த நோயாளியை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தனி வார்டில் அனுமதித்தனா். இந்த நிலையில் அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக மருத்துவமனையில் இருந்து மருத்துவர் ஷினு சியாமளனை வேலை நீக்கம் செய்துள்ளது. இந்த விவகாரத்தை வெளியில் சொல்லியிருக்க கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஷினு சியாமளன், அந்த மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு பாதுகாப்பான வார்டுகள் எதுவும் இல்லை. அந்த நபருக்கு கரோனாவுக்கான அறிகுறி இருக்குமோ என்ற சந்தேகத்தில் தான் பொது சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தேன். என் கடமையை தான் செய்தேன். அதுவும் மற்றவா்களுக்கும் அந்த பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காகதான் செய்தேன். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ அதை வியாபார ரீதியாக தான் பார்த்தது என்றார்.
தனியார் மருத்துவமனையின் இந்த நடவடிக்கைக்கு மருத்துவா்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் மருத்துவர் ஷினு சியாமளன், காங்கிரஸ் ராகுல்காந்தியின் எம்பி தொகுதியான வயநாட்டில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கனமழையில் வீடு இடிந்து விழுந்து பாதிக்கபட்டவா்களுக்கு இரவு பகலாக அங்கே தங்கியிருந்து எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிகிச்சையளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.