பெண்களின் மார்பகங்களோடு தர்பூசணி பழத்தை ஒப்பிட்டுப் பேசிய பேராசிரியரைக் கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது ஃபரூக் பயிற்சிக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் ஜோஹர் முனாவீர். இவர் சில தினங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோ காட்சியில், ‘ஹிஜாப் எனப்படும் துணியை தலையைச் சுற்றி அணிந்துகொள்ளும் பெண்கள் பலரும், ஆண்களை எளிதில் கவர்ந்துவிடும் மார்பகங்களை மறைப்பதில்லை. இது பழக்கடைகளில் தர்பூசணி பழுத்துள்ளதா என்பதற்காக வெட்டி வைத்திருப்பது போல் இருக்கிறது’ என பேசியிருந்தார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மாற்றுக்கருத்து கொண்ட மாணவர் அமைப்பினர் பலர் அந்த பேராசிரியரைக் கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். கேரளா முழுவதிலும் பல மாணவர் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மாணவிகள் கைகளில் வெட்டப்பட்ட தர்பூசணிப் பழங்களோடு போராட்டம் நடத்திவருகின்றனர். சில மாணவிகள் தங்கள் கைகளில் தர்பூசணிப் பழங்களை வைத்திருப்பது மாதிரியான புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக பேராசிரியர் முனாவீர் மாணவிகள் லெக்கிங்ஸ் தெரிய உடை அணிவது குறித்தும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.