கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை 04.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர். கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்றுத் தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி.
உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் நாடு முழுவதும் உள்ள 6 மாநிலங்களில் காலியாக உள்ள புதுப்பள்ளி தொகுதி உட்பட 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
புதுப்பள்ளி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் 78 ஆயிரத்து 98 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 41 ஆயிரத்து 644 வாக்குகளுடன் சிபிஎம் கட்சி 2 ஆம் இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3 ஆம் இடமும் பிடித்தன. தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சி தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.