நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.