தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சூரல்மலா பகுதியில் தரையிறக்கப்பட்டு இரண்டாவது நாளாக இன்றும் (31.07.2024) மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த 146 பேரின் உடல்கள் இதுவரை மீட்பு மீட்கப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி 98 பேரைக் காணவில்லை எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வயநாட்டுக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து அவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அம்மாநில சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.