கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகளவில் உள்ளது. கடந்த ஏழு நாட்களில் இந்தியாவில் பதிவான கரோனா பாதிப்புகளில், பாதி கேரளாவில் பதிவானதுதான். இதனால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு, கேரள அரசை அறிவுறுத்திவருகிறது.
இந்தநிலையில், கேரளாவில் ஆய்வுசெய்த மத்திய குழுவின் தலைவரான, நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் சுஜீத் சிங், கேரளாவில் ஆகஸ்ட் ஒன்று முதல் இருபதாம் தேதிவரை 4.6 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என கூறியள்ளார். மேலும் டாக்டர் சுஜீத் சிங், கேரளாவில் ஓணம் பண்டிகைக்காக கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்படுவதும், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுவதும் கவலையளிக்கிறது என தெரிவித்தார்.
கேரளாவில் தொடர்ந்து கரோனா அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து டாக்டர் சுஜீத் சிங் கூறுகையில், "தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படுகிறது. உதாரணமாக 14,974 பேர், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தனம்திட்டாவில் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட 5,042 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டுவருகின்றன. தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிப்பது குறைவாக உள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை. 80 சதவீத கரோனா நோயாளிகள் வீட்டுத் தனிமையில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வீட்டு தனிமையான விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.