![hgj](http://image.nakkheeran.in/cdn/farfuture/MxAlqqOicR6-LVSXGpMyU_KKKt0idGvac4XMGpuBcZQ/1633950898/sites/default/files/inline-images/snakae.jpg)
கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ். 27 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்ரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது ருத்ராவிடம் 784 கிராம் தங்க நகைகள், கார் உள்ளிட்டவற்றை அவர் வரதட்சணையாக வாங்கியுள்ளார். திருமணம் ஆகி சில மாதங்களிலேயே அவருக்கு வேறு ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர், பாம்பை வைத்து மனைவியைக் கொன்றால் யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தார். இதற்காக யூடியூப்பில் அதிக விஷம் கொண்ட பாம்பு எது என்று பல நாட்கள் பார்த்துள்ளார். அதில் ஒரு பாம்பை இறுதி செய்த அவர், பாம்பு பிடிக்கும் நபரிடம் தனக்கு இதுபோல் ஒரு பாம்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். பாம்பு பிடிப்பவரும் அதே மாதிரியான பாம்பைப் பிடித்து அவரிடம் கொடுத்துள்ளார். அதை மனைவி வீட்டில் இருக்கும் போது அவருக்கு அருகில் தூக்கிப்போட்டுள்ளார். பாம்பு பின்புறமாக வந்து அவரின் காலை கடித்ததுள்ளது.
இதில் நிலைகுலைந்த அவர் கத்தியுள்ளார். எப்படியும் மனைவி இறந்துவிடுவார் என்ற நம்பிக்கையில், அவரை மருத்துவமனைக்கு சூரஜ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 40 நாட்கள் இருந்த அவரின் மனைவி பிழைத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சூரஜ், மீண்டும் ஒரு பாம்பை வாங்கி, மாமனார் வீட்டிற்குப் போயிருந்த மனைவியைக் கொல்ல, அங்கேயே சென்று பாம்பை அவர் தூங்கும் போது அவர் அருகில் வீசியுள்ளார். பாம்பு கடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து மகளைப் பாம்பு கடித்ததால் சந்தேகம் அடைந்த ருத்ராவின் பெற்றோர் போலிசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை விசாரித்த அவர்கள், சூரஜ் தான் இந்த வேலைக்குக் காரணம் எனக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவரை, தற்போது நீதிமன்றம் குற்றவாளி என்றும், இது மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு என்றும் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் நாளை மறுநாள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.