ராகுல்காந்தி கட்டி அணைத்ததால் மோடி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமியின் கருத்து காங்கிரஸ் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.
அப்போது, ராகுல் காந்தி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது. 15 ;லட்சம் ,பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை, சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ராகுல் காந்தி பேசும் போது, பாஜக உறுப்பினர்கள் கடும் அமளி செய்தனர். பிரதமர் மோடி மவுனமாக அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தார்.
ராகுல்காந்தி பேசி முடித்ததும், பிரதமர் மோடி அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றார். தன்னை நோக்கி ஏன் வருகிறார் என்று மோடியும், பாஜக உறுப்பினர்களும் சற்று அமைதியாகவே இருந்தனர் ''தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறி, மோடியை கட்டியணைத்ததும் மோடிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கட்டியணைத்துச் சென்ற ராகுல்காந்தியை அழைத்த மோடி கைக்குலுக்கி அனுப்பினார்.
இந்த செயலுக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி ''பிரதமருக்கு நாடாளுமன்றத்திலேயே பாதுகாப்பு இல்லை. மோடி ராகுலை கட்டியணைக்க அனுமதித்திருக்க கூடாது. ரஷ்யர்களும்,வட கொரியர்களும் மற்றவர்கள் மீது விஷ ஊசியை செலுத்த இந்த முறையைத்தான் கையாளுவார்கள் எனவே பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தன் மீது விஷ ஊசி ஏதேனும் செலுத்தப்பட்டிருக்கிறதா என பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்'' என பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த விமர்சனம் காங்கிரஸ் தரப்பை ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளது