Skip to main content

பழத்தில் வெடிமருந்து... கொடூரமாகக் கொல்லப்பட்ட கருவுற்ற யானை... உதவிக்காக அலைந்தபோதும் மனிதர்களைத் தாக்கவில்லை...

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

kerala elephant incident


கருவுற்றிருந்த யானை ஒன்றிற்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து சாப்பிட கொடுத்ததால் அது காயமடைந்து உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 
 


கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்த 15 வயதான பெண் யானை ஒன்று உணவு தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றுள்ளது. இந்த யானைக்கு அங்குள்ள மக்கள் உணவு அளித்த நிலையில், அடையாளம் தெரியாத ஒரு நபர் அன்னாசிபழத்தில் வெடிமருந்தினை வைத்து கொடுத்துள்ளார். அதனை உண்ண முற்பட்டபோது, யானையின் வாயில் அந்த வெடிமருந்து வெடித்துள்ளது. இதனால், வாய் மற்றும் தும்பிக்கை பகுதிகளில் பலத்த காயமடைந்த அந்த யானை பற்களையும் இழந்துள்ளது.

இந்த வெடியினால் படுகாயமடைந்த அந்த யானை வலி தாங்கமுடியாமல் வீதிகளில் அங்குமிங்கும் உதவிக்காக ஓடியுள்ளது. பின்னர் வலி தெரியாமல் இருப்பதற்காக அங்குள்ள வெள்ளையாறு ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்துள்ளது. மேலும், அதன் பின் மூன்று நாட்களாக அந்த ஆற்றை விட்டு அந்த யானை வெளியே வரவே இல்லை என்கின்றனர் வனத்துறையினர். காயமடைந்த அந்த யானையை மீட்டு சிகிச்சையளிக்க முயற்சித்த வனத்துறையினர், இரண்டு கும்கி யானைகளின் உதவியோடு அதனை வெளியே கொண்டு வர முயன்றுள்ளனர். ஆனால் அந்த யானை வெளியே வரவில்லை. இறப்பதற்கு முன்னர் மூன்று நாட்கள் அந்த ஆற்றைவிட்டு வெளியே வராத அந்த யானை,  கடந்த 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 


பின்னர் அந்த யானையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்ததில் அந்த யானை கருவுற்றிருந்தது தெரிய வந்தது. கருவுற்றிருந்த யானை ஒன்று மனிதர்களின் மிருகத்தனமான செயலால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படுகாயமடைந்த அந்த யானை வீதிகளில் ஓடியபோது கூட யாரையும் காயப்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். உடற்கூறாய்வுக்கு பின்னர் அந்த யானை புதைக்கப்பட்டு, அதற்கு இறுதி மரியாதையையும் அதிகாரிகள் செலுத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதற்கு யார் காரணம் என்பதைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்