பீட்சா, பர்கர் உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்குத் தேடிச் சென்று கொடுக்கும்போது, ரேஷன் பொருட்களைக் கொடுக்க மத்திய அரசு இடைஞ்சல் செய்வது ஏன் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி மாநில அரசு ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று கொடுக்கும் புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இதனிடையே மாநில அரசின் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அம்மாநில முதல்வர், மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். அதில், " ரேஷன் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. இருந்தாலும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக நாங்கள் கடிதம் அனுப்பினோம். ஆனால் தற்போது அதற்கு அனுமதி மறுத்துள்ளார்கள். பீட்சா, பர்கரை வீடுகளுக்குக் கொண்டு சென்று டெலிவரி செய்யும்போது ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு கொடுப்பதில் என்ன தடை இருக்கிறது. மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.