இந்தியாவில் கரோனா பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தநிலையில், இந்தியாவில் நிலவும் கரோனா நிலை குறித்து தொடர்ந்து கருத்துகளைக் கூறிவரும் அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கான இடைவெளியை இந்தியா அதிகரித்திருப்பது, கரோனா சிகிச்சையில் இராணுவத்தைப் பயன்படுத்துவது என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை, இந்தியா அதிகப்படுத்தியிருப்பது நியாயமான அணுகுமுறை என அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "இந்தியாவில் இருப்பதைப் போன்ற மிகவும் கடினமான சூழ்நிலையில் நீங்கள் இருக்கும்போது, உங்களால் முடிந்தவரை விரைவாக தடுப்பூசி போடுவதற்கான வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எனவே இது நியாயமான அணுகுமுறை என்று நான் நம்புகிறேன். நீங்கள் தடுப்பூசி (இரண்டாவது) டோஸை தாமதப்படுத்தினாலும், அது தடுப்பூசியின் செயல்திறனைப் பாதிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் உங்களிடம் போதுமான தடுப்பூசி இல்லாதபோது, அதனை மறைக்க தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கான கால அளவை அதிகரிப்பதை நான் பரிந்துரைக்க மாட்டேன்" என கூறியுள்ளார்.
கரோனா சிகிச்சை பணிகளில், இந்தியா இராணுவத்தைப் பயன்படுத்தலாம் எனவும் அந்தோனி ஃபாஸி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், “காரியங்களை வேகமாக செய்துமுடிக்க நீங்கள் இராணுவத்தைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் மருத்துவப் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அறிகிறேன். எனவே இராணுவத்தின் மூலம் போர்க் காலங்களில் அமைப்பதுபோன்று தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வது குறித்து பதிலளித்துள்ள அவர், “இந்தியாவில் தொற்று பரவல், மிக மிக அதிகமாக இருக்கிறது. எனவே இந்தியாவிற்கு தற்போது பயணம் மேற்கொள்வது கடினம்” என தெரிவித்துள்ளார்.