கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வரும், கர்நாடக மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா, கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழும், நாளை தான் குமாராசாமி தலைமையிலான அரசுக்கு கடைசி நாள் என்று பிஎஸ் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநர் வஜூபாய் வாலா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் இருவர் உடனடியாக நாளை மாலை 05.00 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக ஆளும் முதல்வர் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
மேலும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதை தடுக்க எடியூரப்பா வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்ஏக்களின் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்தார் எடியூரப்பா. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கும் வரை கர்நாடகா மாநிலத்திற்கு வர மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசியலில் அனைத்து கட்சிகளும் அதிரடி முடிவை எடுத்து வரும் நிலையில் நாளைய தினமான திங்கள்கிழமை, கர்நாடக அரசியலில் நிலவி வரும் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்க்கப்படுகிறது.