கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் சபாநாயகருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், ராஜினாமா செய்த 14 எம்.எல்.ஏ.க்களில் 8 பேரின் கடிதங்கள் சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை. அதே போல் இந்த எம்.எல்.ஏக்கள் யாரும் இதுவரை என்னை நேரில் சந்தித்து ராஜினாமாவை சமர்ப்பிக்கவில்லை. என்னை நேரில் வந்து சந்திக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்து அவகாசம் அளித்திருக்கிறேன் என தெரிவித்தார்.
கர்நாடகா மாநில அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம், பரப்பரப்பு என அனைத்து விதமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. ஒரு புறம் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. எனவே இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஆட்சியை காப்பாற்றும் முயற்சியில் முதல்வர் குமாரசாமி ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக பேசிய அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர், ஆட்சியை காப்பாற்ற தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயார் என அறிவித்தனர். ஆனால் ராஜினாமா கடிதத்தை அளித்த எம்.எல்.ஏக்கள் கடிதத்தை திரும்ப பெற மறுப்பு தெரிவித்து வருகின்றன. இவர்களுக்கு பின்னால் பாஜக கட்சி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநில பாஜக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான எடியூரப்பா கர்நாடக அரசை பதவி விலக வலியுறுத்தி நாளை பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக கர்நாடக அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதில் சபாநாயகர் காலம் தாழ்த்தி வருவதும், ஆளுநர் அமைதியாக இருப்பதும், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு சாதகமாக உள்ளது. இருப்பினும் கர்நாடக அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? இல்லையா? ஆட்சி கவிழுமா? என்பதை ஆளுநர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசியலில் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக இருப்பதாகவும், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என அதிமுக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.