கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில் முதல்முறையாக மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாருதீன் ஓவைசி தங்கள் கட்சி வேட்பாளர்களைக் கர்நாடக தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளைத் துவங்கியுள்ள அவர், கட்சி கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அவர், " நாட்டில் எப்படியாவது மதச்சார்பின்மையை ஒழிக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்கத் துவங்கி விட்டனர். நாட்டில் சம வாய்ப்பு என்பது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கருதுகிறது. அதன் வெளிப்பாடே கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் செல்வது அவர்களது விருப்பம் என்று நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்கியுள்ளார். இது வரவேற்க வேண்டிய தீர்ப்பு.
ஹலால் இறைச்சி, முஸ்லீம் தொப்பிகள், தாடி என அனைத்திலும் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக பாஜக நினைக்கிறது. இந்தியாவில் வரும் காலத்தில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் பிரதமராவார்" என்றார். இவரின் கருத்துக்குப் பதிலளித்துள்ள பாஜக, "முதலில் ஹிஜாப் அணிந்த பெண் எப்போது மஜ்லிஸ் கட்சியின் தலைவராவார் என்று சொல்லுங்கள்" என பதிலடி தந்துள்ளனர்.