கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை அம்மாநில சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்தனர். அதே போல் கர்நாடக ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடித நகலை எம்.எல்.ஏக்கள் வழங்கின. மேலும் எங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு அறிவுறுத்த வேண்டும் என ஆளுநரை கேட்டுக்கொண்டன. இதனால் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு உதவும் விதமாக சபாநாயகர் ரமேஷ் குமார் எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் 17 ஆம் தேதிக்குள் நேரில் என்னிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக மும்பை சொகுசு விடுதியில் இருந்த 10 எம்.எல்.ஏக்கள் பலத்த பாதுகாப்புடன் பெங்களுருவில் உள்ள விதான் சவுதாவில் தற்போது சபாநாயகர் ரமேஷ் குமார் முன் ஆஜராகி விளக்கத்தை அளித்து வருகின்றன. இவர்களின் விளக்கத்தை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கடந்த காலங்களை விட தற்போது அரசுக்கு நெருக்கடிகள் அதிக உள்ளது என்றார். மேலும் அரசு கவிழாது என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். பதவி விலகுவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நான் ஏன் பதவி விலக வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.