கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்ததால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த் நீதிபதி, சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு தன்னுடைய பலத்தை காட்ட இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக கூறி இருந்தது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதற்காக எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி என்று பல எம்.எல்.ஏ க்கள் வருகை தந்துள்ளனர். அதிருப்தியில் இருக்கும் காங். எம்.எல்.ஏ க்கள் இன்று நடைபெறும் நம்பிக்கை தீர்மானத்தில் கலந்துக்கொள்ளவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில், சட்டசபையில் விவாதம் காலை 11:30 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது குமாரசாமி, சித்தாரமையா உள்ளிட்டோர் பேசினர். அதிருப்தி எம்.எல்.ஏக்களை கொறடா உத்தரவின் மூலம் வரவைக்க காங். பிளான் செய்தது.
இவர்களை அடுத்து பேசிய சாபாநாயகர், “அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் நடவடிக்கை எடுப்பதால் நான் தலையிட மாட்டேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மிகப்பெரிய அளவில் மதிக்கிறேன். இந்த விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தெளிவு பெற வேண்டும். அதிருப்தி எம் எல் ஏ-க்கள் சட்டமன்றத்திற்கு வரவில்லை எனில் அவர்களுக்கு எந்தவித சலுகையும் கிடைக்காது” என்று எச்சரித்துள்ளார்.
மேலும் அங்கு பேசிய கர்நாடக சட்ட அமைச்சர், ‘கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது’ என்று கூறியுள்ளார்.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.