பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அண்மையில் விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்திருந்ததோடு, விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில் இமாச்சல பிரதேசத்தில் இருந்து பஞ்சாபுக்கு வந்த கங்கனா ரணாவத்தின் கார் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிடுள்ள கங்கனா ஒரு பதிவில், "“நான் பஞ்சாபிற்குள் நுழைந்தபோது, ஒரு கும்பல் எனது காரைத் தாக்கியது. அவர்கள் தங்களை விவசாயிகள் என கூறுகிறார்கள்" என தெரிவித்துள்ளார். அதேபோல் இன்னொரு பதிவில், "அவர்கள் என்னை தாக்கினார்கள். திட்டினர். கொலை மிரட்டல் விடுத்தனர். கும்பலாக படுகொலை செய்வது நம் நாட்டில் வெளிப்படையாகவே நடைபெறுகின்றது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இங்கே நிறைய போலீஸ் அதிகாரிகள் இருந்தும் என் கார் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நான் என்ன அரசியல்வாதியா? அரசியல் கட்சி நடத்துகிறேனா? இது என்ன மாதிரியான நடத்தை? இதை நம்பமுடியாதது. அரசியல் காரணங்களுக்காக எனது பெயரைப் பயன்படுத்துகிறார்கள். காவல்துறை இல்லாவிட்டால் வெளிப்படையாகக் கொலை நடந்திருக்கும்" என கங்கனா தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவர் வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், ஒரு வயதான பெண்மணி கங்கானவை பார்த்து பேசுவதற்கு முன்பு யோசித்து பேசு என்கிறார். அதேபோல் அந்த வீடியோவில் கங்கனா காரை சுற்றி நிற்கும் பெண்களிடம், நான் உங்களை (விவசாயிகளை) பற்றி எதுவும் பேசவில்லை. ஷாஹீன் பாக் (சிஏஏவுக்கு எதிராக டெல்லியில் மாபெரும் போராட்டம் நடந்த இடம்) போராட்டத்தை பற்றித்தான் பேசினேன்" என கூறுகிறார்.
அதன்பிறகு தனது இன்னொரு முற்றுகையிலிருந்து தான் வெளியேறிவிட்டதாக கூறியுள்ள கங்கனா, பஞ்சாப் காவல்துறைக்கும் சி.ஆர்.பி.எஃப்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.