ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் உள்ள ஜே.கே லோன் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அரசு சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதில் டிசம்பர் மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக மூன்று பச்சிளங்குழந்தைகள் வீதம் 100 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, ஆக்சிஜன் பற்றாக்குறை, பராமரிப்பின்மை, நோய்த்தொற்று, இன்குபேட்டர் இல்லாதது போன்ற காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனை ஒன்றில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தால் ஒரே மாதத்தில் 100 குழந்தைகள் உயிரிழந்தது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து முழுமையான விசாரணைக்காக ஜெய்ப்பூர் அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.