மொபைல் நெட்வொர்க் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஜியோ தற்போது 'ஜியோ ஃபைபர்' திட்டத்தின் மூலம் பிராட்பேண்ட் துறையிலும் களம் காண்கிறது.
அதிரடி ஆஃபர்கள், குறைந்த கட்டணம் என டெலிகாம் துறையில் தனது போட்டியாளர்களை ஓரம்கட்டி முதலிடத்தை பிடித்துள்ளது ஜியோ நிறுவனம். இதே போன்ற அணுகுமுறையை கடைபிடித்து ஜியோ ஃபைபர் திட்டத்தையும் வெற்றி திட்டமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
இந்தியா முழுவதும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஜியா ஃபைபரின் சந்தா திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி Jio.com தளம் மற்றும் MyJio செயலி மூலமாக முன்பதிவு செய்து இந்த ஜியா ஃபைபர் திட்டத்தில் இணையலாம். இதற்காக முதலில் 2500 ரூபாய் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதில் 1,500 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட், இதைத் திரும்பப்பெற்றுக்கொள்ள முடியும். 1,000 ரூபாய் இன்ஸ்டால் செய்யும் சேவைக்கான கட்டணம்.
இந்த தொகை கட்டப்பட்ட பின் அறிமுக சலுகையாக 6,400 ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் 4K செட்-அப் பாக்ஸும், 5,000 மதிப்புள்ள ஜியோ ஹோம் கேட்வே சாதனமும் இலவசமாகக் கிடைக்கும். இதன்மூலம் இந்தியா முழுமைக்கும் அளவில்லா போன் கால்கள், 100 Mbps முதல் 1Gbps வேகம் வரையிலான அதிவேக இணைய சேவை உள்ளிட்ட பல வசதிகளை பெற முடியும்.
இந்த சேவைகள் Bronze, Silver, Gold, Diamond, Platinum, Titanium என ஆறு விலைகளில் வருகின்றன. குறைந்தபட்சமாக Bronze பிளானில் மாதம் ரூ.699 செலுத்தினால் 100 Mbps வேகத்தில் 100 GB ஒரு மாதத்திற்குக் கொடுக்கப்படுகிறது. அறிமுக சலுகையாக இத்துடன் முதல் 6 மாதங்களுக்குக் கூடுதல் 50 GB டேட்டா கிடைக்கும். இது முடிந்தவுடன் 1 Mbps இணையச் சேவை தொடரும். அதேபோல அதிகபட்சமாக Titanium பிளானில் மாதம் ரூ.8,499 செலுத்தினால் 1 Gbps வேகத்தில் மாதத்திற்கு 5000 GB டேட்டா கிடைக்கும். மேலும் ஜியோ சினிமா, சாவன் உள்ளிட்ட செயலிகளை இலவசமாக பயன்படுத்த முடியும். இவை அல்லாமல் கூடுதல் சந்தா செலுத்துவதன் மூலம் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வசதியும் இதில் உள்ளது.
மேலும், ஜியோ கோல்ட் மற்றும் சில்வர் வாடிக்கையாளர்களுக்கு 2 புளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கும். இதேபோல் டயமண்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் ஆண்டு திட்ட சந்தாதாரர்களுக்கு இலவச எச்டி டிவி கிடைக்கும் (ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறு திரை அளவு). தங்கத் திட்ட சந்தாதாரர்களுக்கு இலவசமாக 24 அங்குல எச்டி டிவியும் கிடைக்கும், ஆனால் இரண்டு ஆண்டு திட்டத்தை தேர்வு செய்தால் மட்டுமே இந்த டி.வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.