அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ சிவலிங்கா கவுடா, ஹசன் நகர் அருகே நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும் போது, "2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புபணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று மோடி உறுதியளித்தார். இந்த 5 ஆண்டுகளில் அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. உங்களிடம் வாக்கு கேட்டு வரும் பாஜகவினரிடம் எப்போது எங்கள் 15 லட்சத்தை கொடுப்பீர்கள் என்று கேளுங்கள். இந்த தேர்தலில் மோடிக்கு ஆதரவாக யாரேனும் உங்களிடம் வாக்குகேட்டு வந்தால், அவர்களின் கன்னத்தில் அறையுங்கள், மோடி வாழ்க என்று யாரேனும் கோஷமிட்டால், அவர்களை வாயையும், பல்லையும் உடையுங்கள் " என கூறினார். அவரின் இந்த பேச்சு பாஜக வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிரச்சாரம் செய்த ஹசன் தொகுதியில் தேவகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.