இந்தியாவில் 1970-களில் தொடங்கி 90-களின் தொடக்கம் வரையில் இருசக்கர வாகன ஓட்டிகளின் முக்கிய தேர்வாக இருந்தது ஜாவா பைக். 90-களுக்கு பின் அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மூலம் ஜாவா பைக் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய ஜாவாவின் இன்ஜின் 293 சி.சி திறன், 27 பிஎச்பி 6 கியர்கள் மற்றும் ஃபியூல் இன்ஜக்ஷன் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் பழைய இன்ஜின் சி.சி 350 என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஜாவா இன்று (நவம்பர் 15) செய்யப்பட்டுள்ளது.
ஜாவா மற்றும் ஜாவா 42 என இரண்டு மாடல்களில் அறிமுகமாகியுள்ளது. இவை மொத்தம் ஒன்பது வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜாவா பைக்கின் விலை ரூ. 1.64 இலட்சம் மற்றும் ஜாவா 42 மாடலின் விலை ரூ. 1.55 இலட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ. 1.89 இலட்சமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை எனவும், இடங்களுக்கு தகுந்தவாறு விலையில் மாற்றம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் அல்லது 2019 ஜனவரி மாதம் முதல் முழு அளவில் விற்பனை தொடங்கும் என தெரிகிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.