கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏற்கனவே பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் காய்ச்சல் தாக்குதல்கள் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில், அண்மையில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதே நேரம் நிஃபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான குழந்தை ஒன்று வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது. நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரளா சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நிஃபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 16 குழுக்களை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பிபிஇ கிட் அணிந்துகொண்டு பணியாற்றவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.