ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சில தீவிரவாதிகள் கண்டி வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததன் பேரில் ராணுவ வீரர்கள் நேற்று (05.05.2023) தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தீவிரவாதிகள் ஏற்கனவே திட்டமிட்டு மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிகுண்டு வெடித்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவ வீரர்களின் உயிரிழப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.
ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து ரஜோரி மாவட்டம் முழுவதும் இணைய சேவையானது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ரஜோரி மாவட்டத்திற்கு நேரில் சென்று ராணுவ வீரர்களை சந்தித்து அங்கு நிலவும் பதற்றமான சூழல் குறித்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளார்.