இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017- ஆம் ஆண்டு இவருக்கு மரண தண்டனை விதித்தது. கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக சென்ற போது மார்ச் 3 ஆம் தேதி 2016- ஆம் ஆண்டு குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அரசு ஈரானில் கைது செய்தது. அத்துடன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.
இந்திய அரசின் முறையீட்டால் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குல்பூஷண் ஜாதவ்விற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடக்கூடாது எனவும், குல்பூஷண் ஜாதவ்விற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், இன்று நாடாளுமன்றத்தில் குல்பூதன் தீர்ப்பு குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.