தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு எனக் களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (02/03/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதிய கட்சியைப் பதிவு செய்ய 30 நாட்கள் தேவை என்ற அவகாசம் 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் இந்தப் புதிய அறிவிப்பு பொருந்தும். தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பை வெளியிடக் கட்சிகள் இனி 30 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. கட்சித் தொடங்குவது பற்றி இரண்டு தேசிய தினசரி நாளிதழ்கள் மற்றும் இரண்டு பிராந்திய மொழிகளின் தினசரி நாளிதழ்களில் விளம்பரம் அளித்து அதைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கரோனாவால் கட்சிகளைப் பதிவு செய்வதில் நிறைய சிரமங்கள் இருந்ததால், சலுகை வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.