சந்திரயான் - 3 திட்டம் உள்ளிட்ட ராக்கெட் ஏவுகணைகளுக்கு கவுண்ட்டவுனில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டின் அரியலூரைச் சேர்ந்த விஞ்ஞானி வளர்மதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(இஸ்ரோ) ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’ பணியாற்றி வந்தார். அரியலூரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று பின்னர் அண்ணா பல்கலைக் கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1984ல் இஸ்ரோவில் சேர்ந்த வளர்மதி இன்சாட் 2ஏ, ஐஆர்எஸ் ஐசி, ஐஆர்எஸ் ஐடி, டிஇஎஸ் போன்ற திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை 10, 9 என்ற கவுண்டவுன் தொடங்கி விண்கலம் அதன் சுற்று வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது என்பது வரை அறிவிக்கும் ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’ ஆகவும் பணியாற்றியுள்ளார். கடைசியாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 3 செயற்கைக் கோள்களை ஏந்திச் சென்ற பி.எஸ்.எல்.வி சி56 ராக்கெட் நிகழ்வின் கவுண்டவுனை வளர்மதி வர்ணனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் கடந்த மூன்று நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த வளர்மதி, நேற்று சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் இரங்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வளர்மதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இஸ்ரோவின் முன்னாள் இயக்குநரான டாக்டர் பி.வி. வெங்கடகிருஷ்ணன், “ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து இஸ்ரோவின் எதிர்கால பயணங்களின் கவுண்டவுன்களுக்கு வளர்மதியின் குரல் இனி இருக்கப் போவதில்லை. சந்திரயான் 3 அவரது இறுதி கவுண்டவுன் அறிவிப்பு. எதிர்பாராத மரணம்; மிகவும் வருத்தமாக இருக்கிறது” எனத் தனது எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.