நிலவின் தென் துருவம் மற்றும் நிலப்பரப்புகளை ஆராய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலமான சந்திரயான் 2 நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
கடந்த வாரம் இதனை ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவப்படும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன், "சந்திரயான்-2 விண்கலம் அடுத்த ஒரு மாதத்தில் நிலவு குறித்த தகவல்களை நமக்கு கொடுக்க ஆரம்பிக்கும். திட்டமிட்டப்படி சரியாக தரையிறங்கினால் நிலவில் யாரும் போகாத இடத்தில் சந்திரயான்-2 விண்கலம் நிறுத்தப்படும்.
நிலவின் வடதுருவப் பகுதியைவிட தென்துருவப் பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் அடுத்தாண்டு முதல் பாதியில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற விண்கலத்தை வானில் செலுத்த திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. மங்கள்யான் 2 திட்டமும் விரைவில் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.