இஸ்ரோ தலைவர் மாதவன் நாயருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
ஆண்டிரிக்ஸ் என்பது இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவு ஆகும். இதன் நிர்வாகக்குழுவின் தலைவராகவும் மாதவன் நாயரே இருந்தார். ஆண்டிரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தப்படி இன்சாட் செயற்கைக்கோள் மூலம் பல்லூடக சேவைகள் உட்பட பலவற்றை செல்போன்களுக்கு அளிக்கும் எஸ்-பேண்ட் அலைவரிசை குத்தகைக்கு விடுவது முடிவு செய்யப்பட்டது. தேவாஸ் தனியார் நிறுவனம் ஆகும்.
இந்த ஒப்பந்தம் மூலம் ரூ 578 கோடி தனியாருக்கு ஆதாயமாக கிடைக்கச் செய்யப்பட்டது என்பதே குற்றச்சாட்டு. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கருவூலத்திற்கு ரூ 578 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மாதவன் நாயர் உட்பட பலர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மாதவன் நாயர் உட்பட பலரை விசாரிக்க அனுமதி கோரி, உரிய உயரதிகாரிகளிடம் அனுமதியும் பெற்றதை நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 23 ஆம் தேதி மாதவன் நாயர் உட்பட குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.