அண்மையில் டெல்லியில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக 250 ரூபாய் அபராதம் கட்டக்கோரி ஒருவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆனால் அவர் பயணித்தது கார் என்பது தெரிய வந்தது. காரில் பயணிக்கும் நான் ஏன் ஹெல்மெட் போட வேண்டும் என்றும், காரில் செல்லும் போது ஹெல்மெட் போடாததற்கு ஏன் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கேள்வி எழும்ப, இந்த சம்பவம் விவாதத்திற்குள்ளானது.
இந்நிலையில் இதேபோல் ஒரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவரை நிறுத்திய காவல் துறையினர் வாகனத்தின் ஆவணங்களைச் சோதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்த நிலையில், அவருக்கு 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டதற்கான சீட்டை பார்த்த அந்த நபர் அதிர்ந்தார். காரணம் வண்டியில் தேவையான அளவிற்கு பெட்ரோல் இல்லாமல் பயணித்தற்காக அந்த 250 ரூபாய் அபராதமாம். இதனால் திகைத்துப் போன அந்த நபர் அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் தற்பொழுது கேரளா போலீசாரின் இந்த செயல் வைரலாகி வருகிறது.