டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில்,அதே வழக்கில் சி.பி.ஐ.யால் விசாரணைக்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இருந்துவந்தார்.
இந்த சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்ற நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த கையோடு, மக்கள் தனக்கு நேர்மைக்கான சான்றிதழை வழங்கினால் மட்டுமே திரும்ப முதல்வராவேன் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து தொண்டர்களைத் திடுக்கிட வைத்தார். டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி பலரையும் தொற்றிக்கொண்டது. மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெலாட், அதிஷி, துணைச் சபாநாயகர் ராக்கி பிர்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் விவாதிக்கப்பட்டது.
பரபரப்புக்கு மத்தியில் கட்சி கூட்டம் கூடியது; விவாதங்கள் அனல் பறந்தது. இறுதியாக கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷியையே அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிய, அனைவரும் அதனை ஒரு மனதாக ஏற்றுகொண்டனர். இதன் மூலம் டெல்லியில் 8வது முதல்வராகவும், சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித்திற்கு பிறகு மாநிலத்தின் மூன்றாவது பெண் முதல்வராகவும் அதிஷி பதவியேற்கவுள்ளார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி சிங்,ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனிடையே நேற்று டெல்லி துணைநிலை ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்னும் ஒரு வாரத்தில் தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை காலி செய்வார் என்றும், அனைத்து அரசு சலுகைகளையும் கைவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், அரவிந்த் கெஜ்ரிவால் அரசு இல்லத்தை காலி செய்த பிறகு, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் வேறு ஒரு வீட்டில் தங்குவார்கள். அவர்கள் தங்குவதற்காகப் பாதுகாப்பான முறையில் இருக்கும் வீட்டைத் தேடி வருகிறோம். ஆனால் இனி அவரின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். தற்போது இருக்கும் வீடு பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் முக்கியமானது, ஆனால் அவர் அதைக் காலி செய்ய முடிவு செய்துள்ளார். இனி அவர் டெல்லி மக்களுடன் வாழ்வார்” என்று கூறியுள்ளார்.