மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போரட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து சில விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன.
இருப்பினும் பல்வேறு விவசாய அமைப்புகள், டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்துவருகின்றன. நேற்று விவசாயிகளை எல்லையில் இருந்து வெளியேறக்கோரி, அவர்களின் டென்டுகளை கிழிக்க ஒரு கும்பல் முயன்றது. இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்துக் கலவரமாக மாறியது. பிறகு, போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி எல்லைகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (31.01.21) இரவு 11 மணி வரை இணைய சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொதுப் பாதுகாப்பைப் பேணவும், அவசர நிலையைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.