திருமணம் செய்வதாகக் கூறி பெண் ஆய்வாளரின் மகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பெண் காவலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பணிபுரியும் ஆய்வாளர் அனிதா யாதவ் என்பவர், பாதிக்கப்பட்ட பெண் காவலரை கான்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அவ்வப்போது அழைத்துள்ளார். அப்போது அனிதாவின் மகன் நவ்நீத்தின் அறிமுகம் அந்த பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, நவ்நீத் வேறு ஒரு நாளில் அந்த பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை அனிதாவிடம் அந்த பெண் காவலர் கூறிய போது, நவ்நீத்தை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, திருமண ஏற்பாடுகளை காரணம் காட்டி அந்த பெண் பெயரில் அனிதா யாதவ் ரூ.15 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மேலும், தனது தாய் அனிதாவின் உடந்தையுடன், நவ்நீத், அந்த பெண்ணுக்கு தொடர்ந்து உடல் ரீதியாக தொல்லை கொடுத்தும், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இதற்கு அந்த பெண் இணங்கவில்லை என்றால், அவரது ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக நவ்நீத் மிரட்டியுள்ளார். அந்த பெண் இரண்டு முறை கர்ப்பமான பிறகும் கூட, அவர்கள் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளனர். திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த பெண் காவலருக்கு கடைசி வரையில் ஏமாற்றமே கிடைத்தது. இதனால் மனமுடைந்த அந்த பெண் காவலர் தற்கொலை செய்ய நினைத்து, அதன் பிறகு இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த அந்த புகாரை உறுதிப்படுத்திய போலீசார், இந்த சம்பவம் குறித்து அனிதா மற்றும் நவ்நீத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகினறனர்.