
புதுச்சேரி வரலாற்றுப் பேரவை சார்பில் கல்வெட்டு ஆய்வறிஞர் வில்லியனூர் ந.வேங்கடேசன் எழுதிய 'புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்குப் புதுச்சேரி வரலாற்றுப் பேரவை தலைவர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். ஓவியர் இராசராசன், தி.கோவிந்தராசு, இரா.சுகுமாரன், புதுவை தமிழ்நெஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். இரா.சுகன்யா அனைவரையும் வரவேற்று பேசினார்.
பொறிஞர் இரா.தேவதாசு நோக்கவுரை ஆற்றினார். தொல்லியல் சூழல் என்ற தலைப்பில் பேராசிரியர் நா.இளங்கோ கருத்துரை வழங்கினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் நூலை வெளியிட்டு பேசினார். நூலின் முதல் பிரதியை தமிழ் மாமணி கல்லாடன், கலைமாமணி சுந்தர இலட்சுமி நாராயணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் பேசுகையில், " புதுச்சேரியின் வரலாற்றையும் தொல்லியலையும் பாதுகாக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வில்லியனூர் வெங்கடேசன் பல ஆண்டுகளாக கல்வெட்டுக்களை ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்டு உள்ளார். அவருக்கு விழா எடுத்து சிறப்பித்தது பாராட்டுக்குரியது. சுற்றுலாத்துறை சார்பில் கல்வெட்டுப் பூங்கா, சுடுமண் சிற்ப பூங்கா, இலக்கிய பூங்கா அமைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க உள்ளது. கல்வெட்டுப் பூங்கா மூலம் மாணவர்களும் இளைஞர்களும் கல்வெட்டுகளைப் படித்து புதுச்சேரியின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். மேலும், இதன் மூலம் புதுச்சேரிக்குச் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும்" என குறிப்பிட்டார்.
புலவர் வில்லியனூர் ந.வேங்கடேசன் ஏற்புரை வழங்கினார்.