இந்தியாவின் தங்க இறக்குமதி மதிப்பு ஒரே ஆண்டில் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நாட்டின் தங்க இறக்குமதி மதிப்பு 2,400 கோடி டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் நடந்த இறக்குமதி மதிப்பான 680 கோடி டாலர்களை விட சுமார் நான்கு மடங்கு அதிகம். இப்புள்ளி விவரங்களை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கம் இறக்குமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் நான்கு மடங்கு அதிகரித்திருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றன ஏற்றுமதியாளர் கூட்டமைப்பினர்.
கரோனா கட்டுப்பாடுகளால் ஆடம்பட திருமணங்கள் குறைந்துவிட்டதாகவும், அதில் மீதமாகும் பணத்தை மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதாகக் கூறுகின்றன. மேலும் பங்குச்சந்தை முதலீடுகளில் நல்ல லாபம் கிடைப்பதால், அந்த லாபத்தை வெளியே எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தையொட்டி, தேவை அதிகரிப்பும் தங்கம் இறக்குமதி அதிகரிக்க காரணம் என இந்திய நகை ஏற்றுமதியாளர் சங்கம் கூறுகிறது. தங்கத்தின் இறக்குமதி மதிப்பு உயர்ந்தப் போதிலும், வெள்ளியின் இறக்குமதி மதிப்பு குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் முடிந்த காலாண்டில் வெள்ளியின் மதிப்பு 15.5% குறைந்து, 62 கோடி டாலராக உள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.