கேரளாவில் கடந்த 8, 10, 14 ஆகிய தேதிகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல், அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் கவனிக்கபட்டது. காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்றும் அதேபோல் பா.ஜ.க. கணிசமான இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டது. அந்தக் கணிப்பையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து சாதித்தது ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி.
இதில், தலை நகரமான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றும் என்று கேரளா முழுக்க பேசபட்டுவந்தது. 16ஆம் தேதி நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மொத்தம் 100 வார்டுகளைக் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 53 வார்டுகளை கம்யூனிஸ்ட்டும் 35 வார்டுகளை பா.ஜ.க.வும் 10 வார்டுகளை காங்கிரசும் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்டில் மேயா் யார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏற்கனவே மேயர் வேட்பாளராக கட்சியால் தீா்மானிக்கபட்டு குன்னுகுழி வார்டில் போட்டியிட்ட ஓலினா, தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து அடுத்து மேயர் யார் என்பதை அக்கட்சியின் மாவட்ட கமிட்டி தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டது.
இந்த நிலையில், முடவன்முகில் வார்டில் போட்டியிட்ட 21 வயதுடைய ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இவர் ஆல் செயின்ட் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் எஸ்.எப்.ஐ.யின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது தந்தை ராஜேந்திரன் முடவன்முகில் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினராக உள்ளார். மேலும் எலக்ட்டிரீசனாகவும் வேலை செய்து வருகிறார். தாயார் ஸ்ரீலதா எல்.ஐ.சி. ஏஜென்டாகவும் மாதர் சங்கத்திலும் உள்ளார்.
இந்த முடவன்முகில் வார்டு கடந்த 20 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் வசம்தான் உள்ளது. மாநகராட்சியிலே ஒதுக்கப்படும் நிதியை ஒரு பைசாகூட மிச்சம் இல்லாமல் முழுமையாக செலவு செய்யபட்ட வார்டும் இதுதான் என்ற பெருமைக் கொண்டது. அதோடு இந்த வார்டில் வெற்றி பெற்ற ஆர்யா ராஜேந்திரன் மேயராகி இருப்பதன் மூலம் இந்தியாவின் முதல் இளம் வயது மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த வார்டை சேர்ந்த மக்கள், கட்சி பாகுபாடு இல்லாமல் ஆர்யாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் வீடும் இந்த வார்டில்தான் உள்ளது.
இது தொடர்பாக ஆர்யா ராஜேந்திரன் கூறும் போது, “எனது வார்டு முழுமையாக தன்னிறைவு பெற்ற வார்டாக உள்ளது. இதேபோல் மற்ற வார்டுகளையும் மாற்றுவதே என் முதல் திட்டம். அதேபோல் மருத்துவ வசதிகளை உடனடியாக எல்லா வார்டுகளிலும் நிறைவேற்றுவேன். நான், மேயர் என்பதைவிட மாநகராட்சி மக்களின் ஒருவராக தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றும் சேவகனாக பணியாற்றுவேன்” என்றார்.