கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக கே.எஸ்.ஈஸ்வரப்பா பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தான் பெலகாவி மாவட்டம், இண்டல்காவைச் சேர்ந்தவர் சந்தோஷ் கே பாட்டீல். அரசு சிவில் ஒப்பந்ததாரரான இவர் அரசின் ஒப்பந்தங்களை எடுத்து பணிகளை மேற்கொண்டு வருபவர்.
இந்த நிலையில், சந்தோஷ் கே பாட்டீல், உடுப்பியில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் விஷம் குடித்து சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்டார். முன்னதாக, முடித்த அரசுப் பணிகளுக்கான பணம் விடுவிக்க அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா 40 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அவர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது உயிரிழப்புக்கு ஈஸ்வரப்பா தான் காரணம் என்று உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து கே.எஸ்.ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் இருந்து நீக்கி அவரை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ், ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
எனினும், பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா அறிவித்த நிலையில், தனது முடிவை மாற்றிக் கொண்டு, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (14/04/2022) அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன், பெங்களூரு வந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, "ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் வழக்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது வெளிவர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவின் ராஜினாமாவை நான் ஏற்றுக்கொண்டேன், அதை ஆளுநருக்கு அனுப்ப உள்ளேன்" என்றார்.