நரேந்திரமோடி அரசு தலைமையேற்றதிலிருந்து கருப்புப்பண ஒழிப்பு மற்றும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கருப்புப்பணம் மீட்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த மோடி அரசு பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளில் இறங்கி அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வந்தது. அதனை தொடர்ந்து சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள பணத்தின் முதலீட்டு சதவிகிதம் குறைந்தது.
ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் முதலீடு சதவீதம் முன்பை விட 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அதிகரிப்பு விகிதம் தற்போது ரூபாய் மதிப்பில் சுமார் 7000 கோடி ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உயர்வு கருப்புப்பண வேட்டையில் ஈடுபட்டுள்ள மோடி அரசுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்திய உள்ளிட்ட நாடுகளில் இருந்து முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் மதிப்பு 100 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம் எனவும் சுஜர்லாந்து வங்கி தெரிவித்துள்ளது.