கரோனா தனிமை வார்டுகளுக்குப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் ரயில் பெட்டிகளை, கரோனா தனிமை வார்டுகளாக மாற்றித்தர ரயில்வே முன்வந்துள்ளது.
கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது. மேலும், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைப்பதில் இந்தியாவில் சிக்கல் நிலவி வருகிறது. 1000 பேருக்கு மூன்று தனிமை படுக்கைகள் அமைக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வரும் சூழலில், இந்தியாவில் படுக்கை வசதிகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து படுக்கை வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று ரயில்வே மேலாளர்களிடம், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை, கரோனாவுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்றுவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா சிகிச்சைக்கு உதவும் வென்டிலேட்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கான டிராலிகள் உள்ளிட்ட மருத்துவத் துறையின் அத்தியாவசிய உபகரணங்களை உற்பத்தி செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.