இந்தியா மற்றுமின்றி பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலைக்கு ஒமிக்ரான் வகை கரோனா காரணமாக இருந்து வருகிறது. இந்தச்சூழலில் பைசர் தடுப்பூசி நிறுவனம், ஒமிக்ரான் வகை கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்தது.
இந்தநிலையில் இந்திய மருந்து நிறுவனமான ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ், ஒமிக்ரான் தொற்று ஏற்படுவதை தடுக்கும் பிரத்தியேக தடுப்பூசியை தயாரித்து வருவதாகவும், அத்தடுப்பூசி அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் தயாராகிவிடும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அத்தடுப்பூசி, ஒரு சோதனைக்கு பிறகு இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் தான் தயாரித்துள்ள எம்ஆர்என்ஏ கரோனா தடுப்பூசியின் சோதனை தரவுகளை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.